Official Fans Club Flag

Thursday, March 8, 2012

நண்பன் திரை விமர்சனம்

நண்பன் திரை விமர்சனம்
 Tamil Movie - Nanban Review - Jeeva, S.J. Suryah, Sathyan, Sathyaraj, Srikanth, Vijay, Anuya , Iliyana, Muthuraj, Manoj Paramahamsa, Madan Gorky, Shankar, Shankar, Anthony, Harris Jayaraj, Gemini Film Circuit,  Tamil Movie Actor, Actress

இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சொல்லும் கல்லூரி மாணவர்களின் கதை.....

நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில நிச்சயமா ஜெயிப்பீங்க என்பதுதான். வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லிவிட்டுப் போகிறது நண்பன்.
ஏற்கனவே வெளிவந்த '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.

என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் உடன் கல்லூரியில் வந்து சேர்ந்து படிக்கிறார் விஜய். மூன்றுபேரும் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். கல்லூரியில் படித்து முடித்து ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் நண்பன் விஜய் பற்றி எந்த தகவலும் இல்லை. சில வருடங்கள் கழித்து நண்பனை (விஜய்) தேடி அவனது ஊருக்குப் போகிறார்கள். அங்கு போய் பார்த்தால், அங்கு அவனுக்கு பதிலாக வேறு ஆள் (எஸ்.ஜெ.சூர்யா) இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது விஜய் படம்தானா என்ற எண்ணம்தான்? இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களில் எல்லாம் விஜய் அறிமுகமாகும்போதே தாரை தப்பட்டை முழங்கும். பூ மழை பொழியும். இப்படித்தான் இருக்கும் விஜய்யின் அறிமுகக்காட்சிகள். இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. படத்தில் நடித்த எல்லோருமே ஒரு கேரக்டராகத்தான் வந்து போகிறார்கள்.
பஞ்சவன் பாரிவேந்தனாக வரும் விஜய்யை பார்த்தவுடனே நமக்குப் பிடித்துப் போகிறது. கல்லூரியில் சொல்லித் தருவதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான அறிவு சார்ந்த விஷயம் அல்ல.. எல்லாம் வேலை பார்ப்பதற்கு தேவையான ஜஸ்ட் படிப்புதான்.. என்கிற ரீதியில் இருக்கிறது இவர் வந்து பேசுகிற காட்சிகள் எல்லாம். விஜய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது ஆயிரம் மெசேஜ். நண்பன் வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கிளம்பிய விமானத்தையே திருப்பி தரை இறங்கச் செய்து விடும் ஸ்ரீகாந்த் அலட்டலில் ஆரம்பிக்கிற படம் முழுக்க முழுக்க சிரிப்பு மழைதான். சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்கவும் வேண்டிய மெசேஜ்கள் வந்து போகின்றன ஃப்ரேம் பை ஃப்ரேம். தனக்குப் பிடிக்காவிட்டாலும் அப்பாவுக்காக என்ஜீனியரிங் படித்துவிட்டு பின்பு தன் அப்பாவிடம் தனக்குப் பிடித்த போட்டோகிராபியை படிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காட்சிகள் செம டச்சிங்.
விஜய்க்கு அடுத்து பிரமாதப்படுத்தியிருப்பவர் சத்யன். குறிப்பாக அந்த கல்லூரி விழா மேடைப் பேச்சு. சான்ஸே இல்லை! ஆனால் சத்யன் வரும் காட்சிகளில் எல்லாவற்றிலும் 'பாம்' போட்டுக் கொண்டே இருப்பது தியேட்டரே நாறுவது போல ஒரு உணர்வு!
ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஸ்ரீகாந்துக்கு அதிக வாய்ப்பு. நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஜீவாவின் ஏழ்மையைக் குறிக்க படம் முழுக்க ஒரு ஜிப்பாவை மாட்டிவிட்டிருப்பது நன்றாக இல்லை!
சத்யராஜுக்கு மிக முக்கிய வேடம். சரியாகத்தான் செய்திருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு (இதற்குத்தான் ஒரிஜினலைப் பார்க்கக் கூடாது!).
இலியானா இந்தப் படத்தில்தான் இப்படியா... அல்லது எப்போதுமே இப்படித்தானா (தோற்றத்தைச் சொல்கிறோம்) பாடல் காட்சிகளில் மட்டும் பரவாயில்லை... மற்ற காட்சிகளைப் பார்க்கும்போது, 'இலியானா இனி வேணா' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஒரு காட்சி என்றாலும் கதைக்கு முக்கிய திருப்பம் தருகிறது எஸ்.ஜே. சூர்யாவின் பாத்திரம். அவரும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
படத்தில் காமெடி ரொம்ப ரொம்ப அதிகம். அதுவும் குலுங்கி குலுங்கி சிரிக்கிற அளவுக்கு இருக்கின்றன காமெடிகள். ஜீவாவின் அம்மா சப்பாத்தி போடும் போது செய்கிற மேனரிஸம் இருக்கிறதே.. தியேட்டரே செம அலப்பறையாகிறது அந்த காட்சிக்கு. இதற்காகவே ரீப்பிட்டடு ஆடியன்ஸ் நிச்சயம்.
சில காட்சிகளில் குறைகளும் இருக்கின்றன. ஆனால் அது ஒரிஜினலிலும் உண்டு. அந்த வகையில் காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் அப்படியே மொழியாக்கம் செய்த ஷங்கரை குறைசொல்ல முடியாதுதான். ஆனால் அவர் நினைத்திருந்தால், அந்தக் காட்சிகளில் இன்னும் நம்பகத்தன்மை கொண்டுவந்திருக்க முடியும்.
குறிப்பாக, அந்த பிரசவ காட்சி. என்னதான் வீடியோ கான்பரன்சிங், சக மாணவர்களின் துணை, அபார பொறியியல் திறன் கொண்டு அந்த காட்சியை சமாளித்திருந்தாலும், நடைமுறை சாத்தியம் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் காட்சிக்கு முன்பு இலியானா - விஜய் டூயட்டால் லேசாக டல்லடிக்கும் படத்தின் இரண்டாம் பாதி, இந்த பிரசவக் காட்சியின் நீளத்தால் தொங்கிப் போகிறது.
மில்லி மீட்டர் சத்யராஜை கெட் அவுட் சார் என்று சொல்லிவிட்டு தள்ளிக்கொண்டு போகும் இடம் டச்சிங். விஜய் அல்லாத ரசிகர்களும் ரசிக்கும்படியாக ஒரு படத்தை நீண்ட நாளைக்கு அப்புறம் பார்த்த திருப்தி. இதற்காக ஷங்கரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் கேமிராவை பற்றி சொல்லவேண்டுமென்றால் கலர் ஃபுல், கலக்கல் என்று இரண்டு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஹாரிஸின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது. ரீரிக்கார்டிங்கிலும் தூள் கிளப்பியிருக்கிறார். படத்திலிருக்கும் துள்ளல் ரீரிக்கார்டிங்கிலும் இருக்கிறது. ஆண்டனியின் கத்திரியில் இருக்கிறது நாசூக்கு.
ஷங்கர் மற்றும் மதன் கார்க்கியின் வசனங்கள் கூர்மை ஆனால் முக்கியமான வசனங்கள் வரும் காட்சியில் சற்றே அழுத்தம் குறைவாக இருப்பது மிக குறைந்த அளவில் தெரிகிறது. லொகேஷன்கள் மிக அருமை.
சொந்த கதையை படமாக எடுப்பது என்றால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துத் தள்ளிவிடலாம். ஆனால் அதுவே இன்னொருவரது கதை என்றால், அதுவும் ஏற்கனவே வெளிவந்த படத்தை படமாக எடுப்பது என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில்தான் எடுக்கவேண்டி இருக்கும். அதையெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் ஷங்கர். நல்ல வேளை இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் இருந்து வெளிவந்தது. வேறு ரீமேக் மன்னர்கள் கையில் சிக்கியிருந்தால் ஒருவேளை சின்னாபின்னமாகியிருந்தாலும் ஆகியிருக்கலாம். இந்த படம் ஷங்கர் டீமிற்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படம்தான்.
மொத்தத்தில் விஷயம் இல்லாத படங்களைப் பற்றி பீற்றிக்கொள்ளும் விஜய்க்கு உண்மையிலேயே நண்பன் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. அனைத்து தரப்பினரையும் முட்டாளாக்கி 3 மணி நேரம் ஜாலியாக இருக்க வைத்த ஷங்கரை கை குலுக்கு பாராட்டுவோம்.

 Nanban Movie Latest Photos | Actor Nanban - Photo Gallery

நண்பன் - நிதர்சனம்!